×

வேலை வாங்கித்தருவதாக மோசடி அமைச்சர் பிஏவுக்கு எதிராக சிபிசிஐடி விசாரணை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் இருப்பு கணக்கீட்டாளராக ஓசூர், சிப்காட்டில் வேலை செய்கிறேன். கடந்த 2016ம் ஆண்டு அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் வேலை வாங்கித் தரும்படி ஆனந்தி, கலையரசி, சிங், சதீஷ்குமார், உதயகுமார், சரவணன் உள்ளிட்ட 15 பேர் என்னிடம் உதவி கேட்டனர். அவர்களை மின்சாரத்துறை அமைச்சரின் தனி உதவியாளரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவர், நேர்காணலில் உதவி செய்வதாக கூறினார்.

ஆனால், எனக்கு தெரியாமல், இவர்கள் அனைவரும் அமைச்சரின் தனி உதவியாளரிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்ற அவர்கள் நேர்காணலில் தேர்வு செய்யப்பட வில்லை. இதில்,ஆனந்திக்கு மட்டும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அதை பார்த்தபோது தான் போலியானது என்றும் அதிகாரிகள் மோசடி செய்து விட்டனர் என்றும் தெரிந்தது. இந்த விவகாரத்தில், என்னிடம் விசாரணை நடத்த 2020ம் ஆண்டு டிசம்பர் 11ம்தேதி நேரில் ஆஜராகும்படி மின்சார கழகம் நோட்டீஸ் அனுப்பியது. நான் ஆஜராகவில்லை. இதையடுத்து, என்னை பணியிடை நீக்கம் செய்தது.

இதனிடையே, மகேஸ்வரி என்பவர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். என்னை கைது செய்து விடுவதாக மிரட்டி, பணத்தை கொடுக்கும்படி போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.’ இந்த மோசடி வழக்கு ஆவணங்கள் அனைத்தையும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், தர்மபுரி போலீசார் ஒப்படைக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவாக விசாரணை நடத்தி, ஜூன் 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Tags : CPCID ,Minister ,Icourt , CBCID probe against fraud minister PA for hiring: ICC order
× RELATED குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார்; சிபிசிஐடி வழக்குப்பதிவு!